
பசியுடன் படுக்கைக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சொல்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரம். தினமும் 69 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் படுக்கைக்கு செல்லும் போது உணவில்லாமல் பசியுடன் உறங்க செல்கின்றனர்.
பசியை போக்க உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை திட்டினாலும் அதை நடைமுறைப்படுத்தி வெற்றி பெற இயலவில்லை.
இதை விட கொடுமையான வறுமை 1400 ஆண்டுகளுக்கு முன் நபிகளார் வாழ்ந்த அரபுலகில் இருந்தது இவ்வறுமையை ஒழிக்க இஸ்லாம் பல்வேறு போதனைகளை உலகிற்கு முன்வைக்கிறது. இப்போதனைகளை முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காக அதனை இறைவனுக்கு செய்யும் கடமையாக மார்க்கத்தின் சிறப்பு அம்சமாக வலியுறுத்துகிறது.
*அவனை (அல்லாஹ்வை) நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். *[அல்குர்ஆன் 76:8]
‘ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘இஸ்லாத்தில் சிறந்தது எது’ எனக் கேட்டதற்கு, ‘(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும்* நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்’ என்றார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். நூல் : புகாரி. 12
அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருப்பதில்லை‘ நூல் : முஸனத் அபூயஃலா 2699
பேரிச்சம் பழத்தின் துண்டை தர்மம் செய்தேனும் நரக நெருப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் – நூல் முஸ்லிம் 1845
மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் – நூல் புகாரி 7376
இதுபோன்று பல்வேறு போதனைகள் மூலம் தர்மத்தை ஊக்குவித்து மக்களுக்கு உதவ ஊக்கப்படுத்துகிறது இஸ்லாம்.
வீண் விரையம் தவிர்ப்போம்
பசியால் வாடும் மக்கள் ஒருபுறமிருக்க உலகெங்கிலும் வீணாகும் உணவு நம்மை கவலையடைய செய்கிறது. உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகி விடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 1.3 பில்லியன் டன் உணவு வீணாகிறது என்கிறது ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளான் அமைப்பு. 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கி அருளப்பட்ட இறைவேதத்தில் உணவு வீணாக்குவதை பற்றி இறைவன் எச்சரிப்பதை காண்க
உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் (அல்லாஹ்) விரும்ப மாட்டான். [அல்குர்ஆன் 7:31]
அதே போல் “பொருள்களை வீணாக்குவதை இறைவன் வெறுக்கின்றான்” என்கிறது நபி மொழி (புகாரி 1477)
இறைவனை நேசிப்பதால் ஏழைகளுக்கு உணவளிப்பார்கள் எனும் திருக்குர்ஆன் வீண் விரயம் செய்வோரை இறைவன் விரும்பமாட்டான் வெறுக்கிறான் என எச்சரிக்கிறது.
இஸ்லாம் வலியுறுத்தும் பசித்தோருக்கு உணவளித்து வீண் விரையம் செய்யாமல் பசியில்ல உலகை உருவாக்குவோம்.