நாள் ஒன்றுக்கு 32 ரூபாய் செலவழித்தால் அவர் ஏழை அல்ல என்று மத்திய அரசிடம் ரங்கராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு, சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி, ஏழ்மையை வரையறுத்த விதம் பலத்த கண்டனத்தை சந்தித்தது. நாள் ஒன்றுக்கு, நகரத்தில் 33 ரூபாய்க்கு மேலும், கிராமத்தில் 27 ரூபாய்க்கு மேலும் செலவழிப்பவர்களை ஏழைகளாக கருத முடியாது என்று அக்கமிட்டி கூறியது.
அதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் திட்ட கமிஷன் தாக்கல் செய்த பிரமாண பத்திரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஏழ்மையை புதிதாக வரையறுக்க பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது.
ரங்கராஜன் தனது அறிக்கையை மத்திய திட்டமிடல் துறை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங்கிடம் சமர்ப்பித்தார். அதில், நாள் ஒன்றுக்கு நகரத்தில் ரூ.47 க்கு மேலும், கிராமத்தில் ரூ.32 க்கு மேலும் செலவழிப்பவர்களை ஏழைகளாக கருத முடியாது என்று ரங்கராஜன் கமிட்டி கூறியுள்ளது.
கடந்த 2009-2010 ஆம் நிதியாண்டில் 45 கோடியே 40 லட்சமாக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை, 2011-2012 ஆம் நிதியாண்டில் 36 கோடியே 30 லட்சமாக குறைந்து விட்டதாகவும், இதன்மூலம் நாட்டில் 10 பேரில் 3 பேர் ஏழைகள் என்றும் அந்த கமிட்டி கூறியுள்ளது.