அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே…!!!
உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டும்…!!!
இந்த உலகில் நமக்கு வெற்றி என்பது சோதனையில்லாமல் கிடைப்பதில்லை…
அதேசமயம் சோதனை இல்லாத வாழ்க்கையை யாரும் பெற்றிருக்கவுமில்லை…
ஏக இறைவனை ஏற்றவர், மறுத்தவர் என எந்த பாகுபாடின்றி அனைவரது வாழ்க்கையிலும் சோதனை ஒரு முக்கிய இடம் பெற்றிருக்கிறது…
அச்சோதனைகளை
கடந்து செல்பவர் வாழ்கிறார் !
பயந்து நிற்பவர் வீழ்கிறார் !
இதுவே உலக எதார்த்தமும் கூட…
மனித வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கும் இச்சோதனைகளை எதிர்கொண்டு எதிர்நீச்சல் அடிக்க இஸ்லாம் காட்டித்தரும் எளிய வழிமுறை தான் பொறுமை.
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنْ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنْ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرْ الصَّابِرِينَ(155) سورة البقرة
ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)
இறைவன் தன்னுடைய சோதனைகள் எத்தகையது என்பதை மேற்கண்ட வசனத்தில் விளக்கிவிட்டு இறுதியாக பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக என்று நமது பொறுமைக்கான பரிசு எத்தகையது என்பதையும் விளக்குகிறான்…??
ஆம், இறைவனை தவிர நற்செய்தி கூறுவதில் சிறந்தவர் யாராக இருக்க முடியும் ?? அதிலும் இறைவன் கூறும் நற்செய்தி எனும் சொர்க்கத்தை யார் வழங்க முடியும்…!!!
ஆனாலும் மனிதர்களாகிய நமது இயல்போ அவசரம். அதைவிடுத்து இயல்புக்கு மாற்றமான பொறுமையை எப்படி கையாள்வது என்று நமக்கு ஏற்படும் சந்தேகத்திற்கு தீர்வுஒன்றையும் காட்டித் தருகிறான்…
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ(153) سورة البقرة
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)
அன்பாளன் அகில பொதுமறையில் அழகிய வழிமுறையை மேற்கண்ட வசனத்தின் மூலம் விளக்கிவிட்டான்…
இதை பின்பற்றி சுமைக் கொடுக்கும் சோதனையை எதிர்க்கொள்ளும் முஃமின்களது நிலையையும் நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைக்கிறார்கள்…
عَنْ صُهَيْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ رواه مسلم
முஃமின்களின் காரியம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அவனது காரியங்கள் அனைத்தும் அவனுக்கு நல்லதாகவே அமையும். இந்நிலை முஃமினைத் தவிர வேறுயாருக்கும் ஏற்படாது. அவனுக்கு மகிழ்ச்சியளிக்கூடிய செயல் ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைகிறது. அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் பொறுமையை மேற்கொள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹைப்(ரலி)
நூல் : முஸ்லிம் (5318)
பொறுமையின் பயனை பொன்மொழி உரைத்த இறைத்தூதரே சொன்னப்பின் கடைபிடிக்காமலிருப்பது இறைநம்பிக்கையாளனுக்கு அழகல்ல…
இறைவா ! பொறுமை எனும் நற்குணத்தை என்மீது நிலவச் செய்வாயாக !
என பிரார்த்தித்து மறுமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் சோதனை எனும் கடலை பொறுமை எனும் எதிர்நீச்சல் மூலம் எதிர்கொண்டு ஏக இறைவனின் சுவனத்தை பெறும் நற்பாக்கியத்தை நம்மனைவரும் அடைய ஏக இறைவன் வழிச் செய்வானாக !!
பொறுமை தான் சோதனையை எதிர்கொளவதற்கான சிறந்த வழி…!!!
“சிறந்த வழிமுறையின் மூலம் சிறந்த வழியில் சென்று சிறந்த சுவனத்தை அடைவோம்”
இன்ஷா அல்லாஹ்…!!
என்றும்
இறைப்பணியில்,
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
நாகை மாணவர் குழு