ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயற்குழுக் கூட்டம் இன்று (10-03-2019) காலை 10.30 மணியளவில் திருச்சி KMS ஹாலில் அமைப்புத் தலைவர் அல்தாஃபி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில , மாவட்ட, மண்டல, நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.
இச் செயற்குழுவில் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்தும் மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு கீழ்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. நாட்டு மக்களுக்கு சொல்லொனா துயரத்தில் ஆழ்த்திய பாசிச பா ஜ க வையும் அத்துடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளையும் படுதோல்வி அடைய செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. நாட்டின் நலன் மற்றும் சமுக நலன் கருதியும் பாசிச சக்திகளுக்கு எதிராக தற்போது களமாடும்திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
2. பாபர் மஸ்ஜித் வழக்கில் மத்தியஸ்தம் செய்து முடிவு செய்ய குழு அமைத்துள்ள உச்சநீதிமன்ற உத்தரவை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. சான்றுகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டிய நீதிமன்றம் கட்ட பஞ்சாயத்து நடத்த அனுமதியளித்தாகவே இதை நாம் கருதுகிறோம். மத்தியஸ்தம் மூலம் முஸ்லிம்களுக்கு அநீதி தான் இழைக்கப்படும் என்பதற்கு அதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டிருப்பவர்களை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
3. இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20% இருந்தும் நாடாளுமன்ற சட்டமன்றங்களில் உரிய அரசியல் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய, இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசன திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
4. இந்திய சிறுபான்மையின மக்களின் வாழ்க்கை நிலையை அறிய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆகியோரது கமிஷன் அறிக்கைகள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகின்றன. சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைகள் சிறுபான்மை மக்களுடைய சமூக, பொருளாதார நிலைகளை வெளிப்படையாகக் கூறியது. அதைப் பெற்றுக் கொண்ட அரசுகள் அதை முழுமையாக நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் இன்று வரை காலம் தாழ்த்தி வருகின்றன. சச்சார் கமிட்டியின் 76 பரிந்துரைகளில் 46 ஏற்கப்பட்டு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், அவை இன்றளவும் முழுமையாக செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமல்லாது வங்கிகளில் சிறுபான்மையினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள கடன்களும் முழுமையாக வழங்கப்படாமல் இருக்கிறது. அடுத்து வரும் மத்திய அரசாங்கம் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் பரிந்துரையை உடனே அமுல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
5. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில் ஹரிசிங் என்ற மன்னரின் ஆட்சியின் கீழ் தனிநாடாக இருந்தது காஷ்மீர். காஷ்மீரின் மீது தொடுக்கப்பட்ட பதானிய படையெடுப்பில் உதவிகரம் நீட்டிய அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவோடு காஷ்மீரை இணைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார். தம் நாட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களுக்கு விருப்பம் இருக்கும்பட்சத்தில் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்து கொள்ளுமாறு ஹரிசிங் நேருவிடம் வாக்குறுதி பெற்றார். ஆனால் 70 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் காஷ்மீர் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. நிறைவேற்றப்பட வேண்டிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது இந்தியா காஷ்மீர் நாட்டு மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம். எனவே காஷ்மீர் நாட்டு மக்களுக்கு முதல் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு நடத்தி நீதி வழங்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
6. 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுவிக்க இந்திய சட்டத்தில் இடமுள்ளது. அந்த அடிப்படையில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரது பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பல சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விடுவிக்கப்படும் சிறைவாசிகள் பட்டியலில் முஸ்லிம் சிறைவாசிகள் இடம்பெறாமல் இருப்பது வேதனைக்குரியது. எனவே கருணை அடிப்படையில் முஸ்லிம் சிறைவாசிகளையும் விடுவித்து நீதி செலுத்துமாறு இச்செயற்குழு கேட்டு கொள்கிறது.
7. இறந்தவர்களை பொது மையவாடியில் அடக்கம் செய்வதற்கு சில ஊர்களில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுத்து இறந்தவரின் உடலை பல நாட்கள் அடக்கம் செய்யப்படாமல் நீதிமன்றம் வரை செல்ல வேண்டியுள்ளது. பொது மையவாடி என்பது அனைத்து முஸ்லிம்களுக்கும் சொந்தமானதாகும் இதில் அனைத்து முஸ்லிம்களுக்கும் உரிமையுள்ளது.
மனிதாபிமானமற்ற இச்செயலில் ஈடுபடுபவர்கள் தங்களை மாற்றி கொள்ள வேண்டும் இவ்வாறு செய்பவர்கள் மீது அரசும் காவல்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டு கொள்கிறது

