ஒரு பெண் தனது முகம், முன்கை, பாதம் தவிர ஏனைய பாகங்களை அன்னிய ஆண்களுக்கு முன் மறைத்துக் கொள்வது ஹிஜாப் என்றழைக்கப்படுகிறது. குர்ஆன் இதை வலியுறுத்துகிறது.
பெண்களைத் தீங்கிலிருந்து காப்பதும், அவர்களின் கண்ணியத்தை நிலைநாட்டுவதுமே இச்சட்டத்தின் நோக்கமென குர்ஆன்(33:59, 24:31) கூறுகிறது.
ஒட்டுமொத்த பெண்களின் உரிமையாகவும் பெருமையாகவும் கொண்டாடப்பட வேண்டிய ஓர்ஆடை, முஸ்லிம் பெண்களின் ஆடையாகவும் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட உரிமையாகவும் சுருக்கப்பட்டிருப்பதே பெண் இனத்திற்கு எதிரான பெரும் அரசியல் சதியாகும்.
ஏனெனில் இஸ்லாம் மட்டுமல்ல இந்து, கிறிஸ்தவ வேதங்களும் இதையே பெண்களுக்கு வலியுறுத்துகின்றன. பைபிளின் 1 கொரிந்தியர் 11:6 ஆம் வசனம், ரிக் வேதத்தின் நூல் 08 வேதவரி 33 மந்திரம் 19ம் இந்தக் கருத்தை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
நாம் செய்யும் தொழில் மற்றும் பிறர் நம்மை எப்படி மதிப்பிட வேண்டுமென்று விரும்புகிறோமோ அதற்கேற்பதான் ஆடைகளை நாம் தேர்ந்தெடுக்கிறோம்.
பிச்சைக்காரர் கிழிந்த, அழுக்கடைந்த ஆடைகளை அணிகிறார். பெரும் தொழிலதிபர் மிடுக்கான கோட்,சூட்களைத் தேர்ந்தெடுக்கிறார்.
அதுபோலத்தான் ஆண்களின் ஆசைவலைக்குள் அகப்பட விரும்பாத ஒரு பெண், அவர்களின் பாலியல் பார்வைக்கு பலியாக விரும்பாத ஒரு பெண் அதற்கேற்ப தன் உடலை முழுமையாக மறைக்கும் ஆடையைத் தேர்ந்தெடுக்கிறார். இது எப்படி முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே உரியதாக இருக்க முடியும்?
முக்காடு, பெண்களின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது என்று சிலர் புலம்புகின்றனர். ஹிஜாப் என்பது சுதந்திரமாகப் பறக்கத்தானே தவிர சுதந்திரத்தைப் பறிப்பதற்கு அல்ல. தலைத் துணி தலைக்குத்தானே தவிர அதற்குள்ளிருக்கும் மூளைக்கோ சிந்தனைக்கோ அல்ல.
இந்தியாவின் முதல் குடிமகன் எனும் மிக உயர்ந்த பதவி வகித்த பிரதீபா பாட்டீல் அவர்கள், தன் உடலை மறைத்து, தலைக்கு முக்காடு அணிந்தபடியேதான் தனது பதவி காலத்தை நிறைவு செய்தார். அமைச்சராக, ஆளுநராக, மாநில சட்ட ஆலோசகராக முன்னர் அவர் வகித்த அனைத்து பதவிகளையும் அந்த ஆடையோடு தான் (ஹிஜாப்) கடந்து வந்தார். அது அவர் அறிவைத் தடுத்ததா? முன்னேற்றத்தை முடக்கியதா? இவரை போன்று தான் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து தங்களது துறையில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
தற்போது கர்நாடகாவில் ஹிஜாபுக்கு எதிராக எழுந்துள்ள கலவரத்தீ, ஏன்? எதற்கு? யாரால் என்பதை அறிவுடையோர் சிந்திக்க வேண்டும்.
பெண்களின் ஆடையை ஏன் இவர்கள் அகற்றச் சொல்கிறார்கள்?
அவர்களின் நோக்கம் என்ன?
அவர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள்? என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்
இது அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கெடுக்கும் ஆடை என்கிறது கர்நாடக பாஜகவின் கல்வித்துறை. பெண் பிள்ளைகளின் தலையிலிருக்கும் ஒரு துண்டுத் துணி எந்த அமைதியை அழித்தது? யார் இணக்கத்தைக் கெடுத்தது?
கடைவீதி, மருத்துவமனை, காவல்நிலையம், சட்டமன்றம், நீதிமன்றம் பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் அமைதியைக் கடைபிடிக்கும் இந்த ஆடை, கல்லூரி வாசலில் காலடி வைத்ததும் அராஜக ஆடையாகி விடும் அற்புதத்தை அவர்கள் விளக்குவார்களா?
ஒன்றுமட்டும் உண்மை. அனைவரும் விரும்பும்படி யாராலும் வாழவும் முடியாது. அடுத்தவர் விருப்பத்திற்காக ஆடை அணியவும் முடியாது.
ஒருவரின் செயல் எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவரது சமய, சமூக நம்பிக்கைகளின்படி அவர் வாழ்கிற வாழ்க்கையை நான் சகித்துக் கொள்ள வேண்டும். அதுதான் நல்லிணக்கத்திற்கான வழி. வாழ்க்கைக்கு நேர்வழியை காட்டும் இஸ்லாம், உங்கள் வழி உங்களுக்கு எனது வழி எனக்கு என்று யாருக்கும் இடையூறு இல்லாத இனிய பாதையை இஸ்லாம் உலகிற்கு கற்றுத் தந்திருக்கிறது.
மேல்சட்டை இல்லாத பூசாரியின் வருகை நாகரீகமற்றதாக ஒருவருக்குத் தோன்றலாம். அதற்காக அவரை கண்ணியக் குறைவாக நடத்திவிடக் கூடாது என்ற தெளிவு வேண்டும்.
நீளங்கி போட்ட கன்னியாஸ்திரியின் பிரார்த்தனை உங்களுக்கு எரிச்சலைத் தரலாம் அதற்காக அவரை இழிவுபடுத்திவிட முடியாது என்கிற ஞானம் வேண்டும்.
திருநீரு பூசிய சைவர், நாமம் போட்ட வைணவர், சிலுவைஅணிந்த கிறிஸ்தவர், டர்பன் கட்டிய சீக்கியர், பட்டை, உத்திராட்சம், ஐயப்பசாமி கருப்பு, ஓம்சக்தி சிவப்பு என பல்வேறு சமய வேறுபாடுகளை வெளிப்படுத்திக் கொண்டே யாரும் யாரையும் முகம் சுளிக்காமல் இயல்பாக நண்பர்களாக பழகி வந்த பாடசாலைகள் திடீரென முஸ்லிம் பெண்களின் தலைத் துணியை மட்டும் கேள்விக்குள்ளாக்குகின்றன என்றால் கோளாறு ஆடையில் இல்லை. அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் காவி அரசியல் தான்.
இந்தக் காவி நோய்க்கான கசப்பு மருந்து தான் இந்திய அரசமைப்புச் சட்டம். அதை அகற்ற நினைக்கும் அயோக்கியர்களுக்குச் சொல்வோம்.
“நாங்கள் விரும்பிய மதத்தை ஏற்போம், ஏற்ற மதத்தைக் கடைபிடிப்போம், அதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வோம்” விரும்பினால் ஏற்றுக் கொள்ளவும் நிராகரிக்கவும் சட்டம் அவர்களுக்கு உரிமையை வழங்கியுள்ளது.
இதைத் தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை, தடுப்பவன் இந்தியக் குடிமகன் இல்லை. இது அரசமைப்புச் சட்டம் தந்த அடிப்படை உரிமை, அதைக் காப்பதே என் கடமை என்பதை
உரத்துச் சொல்வோம் உறுதியாக வெல்வோம்.
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
[அல்குர்ஆன் 33:59]
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
[அல்குர்ஆன் 24:31]
வெளியீடு
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
தலைமையகம்
தாருஸ்ஸலாம் தஃவா சென்டர்
46, MK தெரு பாலக்கரை
திருச்சி- 620008
Email : [email protected] www.onlineymj.com. Whatsapp : +919710290178
Print seyya