கோவையில் தொடரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்
மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஆயுதம் ஏந்துவார்கள் எச்சரிக்கை !
சென்ற மாதம் பொள்ளாச்சியில் வெளிச்சத்திற்கு வந்த பாலியல் சம்பவம் நடந்து, மக்களுக்கு அதன் வடுவே அழியாத நிலையில், அதனை தொடர்ந்து கோவை துடியலூரில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாள்.
நேற்று முன் தினம்(5-4-2019) கோவை போத்தனூரை அடுத்த பிள்ளையார்புரம் பகுதியைச்சேர்ந்த தொழிலாளியின் மகள் 4 ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி தனது வளர்ப்பு தந்தை தன்னை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.
இதை காவல்துறை விசாரித்ததில் வளர்ப்பு தந்தை செல்வராஜ் (60) உட்பட பள்ளி மாணவர்கள் மூன்று பேருடன் சேர்ந்து
வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இச்சூழலில் நேற்று (6-4-2019)
கோவையில் படித்து வரும் திண்டுக்கல்லை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவருடைய சடலம் பொள்ளாச்சி – தாராபுரம் சாலையோரம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. வயது வித்தியாசமின்றி பாலியல் தாக்குதலுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றனர்.
இது போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கக்கூடிய இஸ்லாமிய குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் தொடர்ச்சியாக கோரி வருகிறது.
நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தின் மேற்ப்பார்வையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரிய மனுவை நேற்று முன் தினம்(5-4-2019) உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்தவிட்டது.
இதனால் மக்கள் நீதிமன்றங்கள் மீதும் சட்டத்தின் மீதும் வைத்துள்ள நம்பிக்கையை இழக்க செய்யும்.
கடுமையான தண்டனையில்லாமல் வெறுமனே கண்துடைப்பாக குற்றவாளிகளை கைது செய்து அரசு செலவில் அவர்களுக்கு அனைத்து வசதிகள் செய்து தரும்பட்சத்தில் குற்றங்கள் அதிகரிக்குமே தவிர குறையாது என்பதனையும் கூறிக்கொள்கிறோம்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் 2 பெண்கள் தற்க்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கியிருந்தனர். அரசு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்காத பட்சத்தில்,இது போன்று பொதுமக்கள் தங்களை பாதுக்காத்து கொள்ள அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் ஆயுதம் ஏந்த தயாராவார்கள். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு உள்ளது என்பதனையும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் எச்சரிக்கிறது.
இப்படிக்கு
முஹம்மது சுல்தான்
பொதுச் செயலாளர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
98841-32651
நாள் : 7 ஏப்ரல் 2019