20-1-2019 ஞாயிறு அன்று திருப்பூரில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாத்தின் முதல் மாநிலப் பொதுக்குழு அல்லாஹ்வின் நாட்டத்தால் இனிதே நடைபெற்றது.
சில கசப்பான நிகழ்வுகளுக்கிடையே தவிர்க்க இயலாத காரணத்தினால் நடைபெற்ற இந்த பொதுக்குழு மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
துவக்கம் முதலே அரங்கம் நிறைந்து விட்ட காரணத்தினால் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என்பதையும் கடந்து சில உறுப்பினர்களையும் (பதவிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல்) மேடையில் அமர வைத்தனர்.

காலை 10 மணிக்கு சேப்பாக்கம் அப்துல்லாஹ் தலைமையில் துவங்கிய இந்த பொதுக்குழுவில் நிஷார் கபீர், MISC., அவர்கள் இறையச்சம் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அடுத்ததாக, மாநில பொருளாளர் அப்துல் மாலிக் அவர்கள் மேடையில் கஜா புயல் நிவாரண வரவு – செலவு கணக்கை துல்லியமாக தாக்கல் செய்தார். அத்துடன் ஏற்கனவே அறிவித்ததன் அடிப்படையில், டிரஸ்ட் சம்மந்தமான சில அவசியத்தை எடுத்துரைத்தார். அரசாங்கத்தின் தேவையற்ற கெடுபிடிகளை தவிர்க்கவும், சில இயக்கங்கள் வரவு – செலவு கணக்கை துல்லியமாக வெளியிட தயங்கும் நிலை போல இந்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்திற்கும் வந்துவிடக்கூடாது என்பதற்கும் இரண்டு வகையான டிரஸ்ட் அமைக்கப்பட்டதாக விளக்கினார்.
தொடர்ந்து, தலைமை முடிவு செய்திருந்த நிகழ்ச்சி நிரலை பொதுக்குழு உறுப்பினர்கள் உரிமையுடன் மாற்றியமைத்தார்கள். கேள்விகள், ஆலோசனைகள் என கலந்தாய்வு நிகழ்வாக மாறியது. அனைவரின் கேள்விகளையும், ஆலோசனைகளையும் தனித்தனியாக எழுதி வாங்கிக்கொண்டு உடனுக்குடன் அல்தாபி மேடையில் பதிலளித்தார்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின்னரும் சில நிமிடங்கள் தொடர்ந்த இந்த நிகழ்ச்சி மிகவும் இன்றியமையாதது என்பதை மாநில நிர்வாகிகள் உட்பட அனைவரும் அறிந்து கொண்டனர். சந்தேகங்கள், குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் இந்த ஜமாத்தில் தொடர முடியாது என்பதால் தமக்குள் பரஸ்பர புரிதல்கள் தான் முதலில் தேவை என்பதால் அதிகமான கால அவகாசம் தேவைப்பட்டாலும் அது யாருக்கும் சலிப்பை ஏற்படுத்தவில்லை.
எந்த கேள்வியும் கேட்காமல் எல்லாவற்றுக்கும் தலையாட்டும் சமுதாயம் இன்று பல கேள்விகள் கேட்டு, எதிர்கேள்வி, துணைக்கேள்வியுடன் தெளிவு பெற விரும்பியது மகிழ்ச்சியாகவே இருந்தது. உணர்ச்சிவசப்படும் சமுதாயமாக இல்லாமல், அறிவுப்பூர்வமான சமுதாயமாக இந்த சமுதாயம் மாற வேண்டும் என்பது தான் YMJவின் லட்சியமாக இருக்கிறது என்பதை இந்த பொதுக்குழு பறைசாற்றியது.
அடுத்ததாக, மாநில நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. கடலூர் அப்துர்ரஜ்ஜாக் அவர்கள் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று நிர்வாகத் தேர்வை நேர்மையாக நடத்தினார். மாநில நிர்வாகிகளை பொதுக்குழு உறுப்பினர்களே முன்மொழிந்து அவர்களே தேர்ந்தெடுத்தனர்.
முதல் மாநில பொதுக்குழு என்பதால் இம்முறை மட்டும் தான் இவ்வாறு நடக்கிறது என்றும் அடுத்தமுறை வாக்குச்சீட்டு கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர்.
வேறெந்த ஹிக்மத்தும் நடைபெறவில்லை என்பதற்கு சபையோரே சாட்சி.
அல்தாபி மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுல்தான் அவர்கள் பொதுச்செயலாளராகவும், அப்துல் மாலிக் அவர்கள் மாநிலப் பொருளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில செயலாளர்களாக பரவலான மாவட்டங்களிலிருந்து எட்டு பேரை தேர்வு செய்தனர்.
மாநில நிர்வாகிகள் ஊதியம் வாங்கிக் கொண்டு நிர்வகிக்க வேண்டாம் என்றும், தேவைப்பட்டால் ஊழியர்களை சம்பளத்திற்கு அமர்த்திக் கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை என்றும் எழுதப்படாத விதியாக தலைமை அறிவித்தது அனைவரையும் ஈர்த்தது.
மாநில செயலாளர் இஸ்மாயில், பைலாவின் சில முக்கிய அம்சங்களை எடுத்துரைத்து ஒப்புதல் வாங்கிக்கொண்டார். அதில் குறிப்பிடும்படியான சில அம்சங்கள் :
1) ஒழுங்கு நடவடிக்கை சம்மந்தமாக அனைவருக்கும் ஒரே வகையான தண்டனை இல்லை. அந்த தவறுக்கான கால சூழல், தவறின் அளவுகோல் உட்பட அனைத்தையும் கவனத்தில்கொண்டு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணித்தரமாக கூறினார்.
தனிநபரின் மான, மரியாதை கண்டிப்பாக காக்கப்படும் என்றும் வரம்பு மீறல்கள் இருக்காது என்றும் தெளிவாக அழுத்தமாகவே விளக்கினார்.
2) ஒரே இடத்தில் அதிகாரக் குவியல் இருப்பது தான் சர்வாதிகாரப் போக்கிற்கு அடிப்படை காரணம் என்றும், அதை தடுக்க அந்தந்த மாவட்ட, கிளை நிர்வாகிகள் வாங்கும் சொத்துக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ப பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக, YMJ மாநிலத்தலைவர் அல்தாபி உரை நிகழ்த்தினார். கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவோ, சமூக வலைத்தளங்கள் மூலமாகவோ பரபரப்பாக இந்த இயக்கத்தை கொண்டு செல்ல விரும்பினால் நாம் மக்களின் கவனத்தை எளிதில் அடைந்து விடலாம். ஆனால், சதக்கத்துல் ஜாரியா என்ற நிரந்தர நன்மையை அடையமுடியாது என்பதை அனுபவரீதியாக கூறினார்.
எதிர்கால திட்டங்கள் என நீண்ட ஒரு பட்டியலை வாசித்து மேடைப்பேச்சாக மட்டுமே கடந்து செல்லாமல், ஒரு சில திட்டங்களை மட்டும் கையிலெடுத்து அதை முழுமையாக செய்வது தான் மறுமை சேகரிப்பாக அமையும் என்று அழகாக எடுத்துரைத்தார்.
“குறைவான அமலாக இருந்தாலும் அதை தொடர்ச்சியாக செய்வது தான் இறைவனிடம் விருப்பத்திற்குரியது” என்ற இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பொன்மொழியை மேற்கோள் காட்டினார். பொறுமையாக இருந்து தலைமைக்கு பக்கபலமாக செயல்பட்டால் இன்ஷா அல்லாஹ் மறுமை வெற்றி உறுதி என்ற ரீதியில் அமைந்த அல்தாபியின் நெகிழ்ச்சியான உரை அனைவரையும் கட்டிப்போட்டது.
ஒட்டுமொத்த தமிழகத்தில் 1 சதவீதத்தினரை கூட ஏகத்துவம் சென்றடையாத நிலையை யதார்த்தமாக கூறி, சிறு வயது முதல் தூய்மையான இஸ்லாம் மனதில் பதிய மக்தப் மதரஸா அனைத்து கிளைகளிலும், அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக துவக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
அன்பு மார்க்கம் இஸ்லாம், கடவுளை தான் வாங்குகிறீர்களா? நான் ஏன் தீவிரவாதி? ஆகிய 3 தலைப்புகளில் அல்தாபி எழுதி வரும் மார்க்க விளக்க நூல்களை YMJ பப்ளிகேசன்ஸ் சார்பில் தலைமை விரைவில் வெளியிட உள்ளதாக மகிழ்ச்சியான செய்தியையும் மேடையில் அறிவித்தார்கள்.
திருப்பூர் அப்துர்ரஹ்மான் அவர்கள் நன்றியுரை கூறி பொதுக்குழுவை இனிதே முடித்து வைத்தார்கள். பொதுக்குழு ஏற்பாட்டை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். முழு திருப்தியுடன் கொள்கை சொந்தங்கள் கலைந்து சென்றனர். எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.
குறிப்பு : மாநில பொதுக்குழுவிற்காக திருப்பூரில் கூடிய நூற்றுக்கணக்கானோரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தவர்கள் தான். அந்த தலைமையின் மார்க்க விரோதப் போக்கினை கண்டித்து வெளியேறியவர்கள் தான். இயக்கத்தை காக்க போர் நடப்பதாகவும், எந்த எல்லைக்கும் செல்லலாம் என்றும் இயக்க வெறியுடன் வரம்பு மீறி அநீதி இழைத்து, பல பத்தினிப் பெண்கள் மீது அவதூறுகள் பரப்பிய நிலையில் பாதிக்கப்பட்ட கொள்கை சொந்தங்கள் சங்கமித்து உருவாக்கப்பட்டது தான் இந்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்.
மறுமை வாழ்வு நாசமாகி விடும் என்று இறையச்சத்துடன் வெளியேறிய சொந்தங்கள் இந்த ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மூலம் ஈருலக வெற்றி பெற வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திப்போமாக.
நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான்.
– திருக்குர்ஆன் 3:103