இன்று (அக்டோபர் 16) உலக பசி தினம். உணவு கிடைக்காமல் உலகின் பெரும் கூட்டம் வாடிக் கொண்டிருக்க, உணவு வீணடிக்கப்படுதல் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா 102-ஆவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டிற்கான குறியீட்டில் பாகிஸ்தானை விட இந்தியா 8 புள்ளிகள் பின்னுக்கு சென்றிருப்பதும் குளோபல் ஹங்கேர் இன்டெஸ் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் 117 நாடுகளில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா 102ஆவது இடத்தில் இருக்கிறது. தெற்காசிய நாடுகளில் பசியால் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியாதான் கடைசி இடத்துக்கு பின்தங்கி இருப்பதும் தெரியவந்திருக்கிறது.
இச்சந்தர்பத்தில் மனித குலத்தின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வை சொல்லும் இஸ்லாமிய மார்க்கம் பசி போக்குவதின் அவசியத்தை பற்றி என்ன கூறுகிறது என பார்ப்போம்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று கேட்டார். அதற்கு பசித்தோருக்கு உணவளிப்பதும் , நீ அறிந்தவருக்கும் , அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும் என பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) நூல்: புகாரி: 12, 28, 6236 முஸ்லிம்: 56, திர்மிதி: 1778 நஸாயீ: 4914, அபூதாவூத்: 4520, இப்னு மாஜா: 3244 அஹ்மது: 6293.
கியாமத் நாளில் அல்லாஹ் (ஒரு மனிதனை அழைத்து) ஆதமின் மகனே உன்னிடத்தில் பசியுடன் வந்த எனக்கு நீ உணவளிக்கவில்லையே (எனக் கேட்பான்) என் இறைவா அகிலத்தின் அதிபதியாகிய உனக்கு நான் எப்படி உணவளிக்க முடியும்? என்பான் அதற்கு அல்லாஹ் என்னுடைய இன்ன அடியான் உன்னிடம் பசியுடன் வந்தான். அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. அவனுக்கு கொடுத்திருந்தால் அதன் பலனை என்னிடம் அடைந்திருப்பாய் என்று இறைவன் கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்: 4661, அஹ்மது: 8874.
அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் போது நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவனே அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள் என்று (ஏக இறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர். அல்குர்ஆன்: 36:47)அவனைப் பிடியுங்கள் அவனுக்கு விலங்கு மாட்டுங்கள். பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள். பின்னர்எழுபது முழச் சங்கிலியால் அவனைப் பிணையுங்கள். (ஏனெனில்) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பவில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டவும் இல்லை. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் யாரும் இல்லை.
அல்குர்ஆன்: 69:30-3
சொர்க்கச்சோலைகளில் இருப்போர் குற்றவாளிகளிடம் உங்களை நரகில் சேர்த்தது எது? என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போரகவும் இருக்கவில்லை (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். எங்களுக்கு மரணம் வரும் வரை தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம் என்று (பதில்) கூறுவார்கள்.
அல்குர்ஆன்: 74:40-47
(சொர்க்கத்திற்குரியோர்) அவனை நேசித்ததற்காக ஏழைக்கும்,, அனாதைக்கும் , சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதி பலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம் (என்று கூறுவார்கள்). அல்குர்ஆன்: 76:8-10
தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனை நீர் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான் , ஏழைக்கு உணவளிக்க தூண்டுவதில்லை. அல்குர்ஆன்: 107:1,2,3,
(சொர்க்கம் செல்வதற்கு இடையில் உள்ள கணவாயை அவன் கடக்கவில்லை) கணவாய் என்பது என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்? அடிமையை விடுதலை செய்தல், நெருங்கிய உறவுடைய அனாதைக்கும் வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாயாகும்) ,
அல்குர்ஆன்: 90:11-17
உணவை வீணாக்காதீர்
“உண்ணுங்கள், பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் வீண் விரயம் செய்பவர்களை இறைவன் நேசிப்பதில்லை” திருக்குர்ஆன் 7:31
“இருவரின் உணவு மூவருக்குப் போதுமானதாகும். மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (புகாரி:5392).
பசி போக்குவது இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மிக சிறந்த செயலாகவும் அதே போல் அதை வீணாக்குவது மிகவும் கெட்ட செயலாகவும் சொல்லப்பட்டுள்ளது , இதனால் தான் இஸ்லாமிய மார்க்கத்தில் நாம் செய்யும் பல தவறுகளுக்கு பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என கட்டளை உள்ளது.
மேலே சொல்லப்பட்ட இஸ்லாமிய மார்க்க நெறி முறைகளை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் உலகில் பட்டினிச்சாவுகள் இல்லாமல் போய்விடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
வெளியீடு : ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்