இழப்பின் வலிகளைச் சொல்ல முடியாமல் தவித்த உதடுகளும், கண்ணீர்விட்டுக் களைத்துப் போன அந்தத் தாயின் கண்களும் மனதிலிருந்து எப்போது மறையும் என்றே தெரியவில்லை.
பைக்கில என் பின்னாடி உட்கார்ந்துதான் வருவான். எதிர்க் காத்தைத் தாண்டி அவன் மூச்சுக் காத்து என் முதுகுல படும். இப்பகூட தோள்பட்டைல அவன் மூச்சுக் காத்து அடிக்கிற மாதிரியே இருக்கு! என்று வெடித்து அழும் அந்த அப்பாவுக்கு என்ன மறுமொழி சொல்லப் போகிறோம் என்பதும் தெரியவில்லை.
பயமாயிருக்கு! இன்னொரு புள்ளைய எப்படி வளக்குறதுன்னே தெரியல. தொடர்ந்து அழுவுறேன். ஆனாலும் மனசு அடங்கல. அவன் போட்டோ, அவன் பயன்படுத்துன பொருள், அவன் நினைவா இருக்கும் எல்லாத்தையும் மறைச்சு வச்சுட்டோம். ஆனா கனவுல வர்றான். கடைக்கு கூட்டிட்டுப் போகச் சொல்றான். டெஸ்ட் எழுதுறேன் திருத்தி தர்றியானு கேக்குறான். நூடுல்ஸ் செஞ்சு தரச் சொல்றான். எங்களால இருக்கவும் முடியல, சாகவும் முடியல என்று தேம்பித் தேம்பி அழுகிற பெற்றோர்களை தேற்றுவதற்கு நம்மிடம் வார்த்தைகள் இல்லை.
இப்படியெல்லாம் அம்மாவும் அப்பாவும் கதறித் துடிப்பார்கள் என்று தெரிந்திருந்தால் அப்படியொரு முடிவை அவர்கள் எடுத்திருக்க மாட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.
பாருங்கடா! உங்களை இழந்துட்டு எப்படி துடிக்கிறாங்கன்னு பாருங்கடா என்று அவர்களை உலுக்கிக் கத்த வேண்டும் போல இருக்கிறது.
பதின்பருவத்துப் பிள்ளைகள் பொசுக்கென்று முடிவெடுத்து தம் வாழ்வை முடித்துக் கொள்ளும் செய்திகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
காலப் போக்கில் நம் இழப்பை எல்லோரும் மறந்து விடுவார்கள் என்று எண்ணிக் கொள்கிறீர்களா? பாசத்திற்குரிய மனிதர்களின் அசாதாரணமான மரணங்கள் அவ்வளவு எளிதில் மனதை விட்டு மறைவதில்லை.
இனி நான் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று சாவை நியாயப்படுத்த காரணம் சொல்லும் உங்களுக்கு வாழ்க்கையை அர்த்தமாக்கிக் கொள்ள ஆயிரமாயிரம் வாய்ப்புகள் திறந்து கிடப்பது தெரியவில்லையா?
மகன் ஒரு வார்த்தை வெடுக்கென்று சொல்லிவிட்டதற்காக மருகிக் கொண்டு தாத்தாவின் பழைய வேட்டியை எடுத்து வைத்துக் கொண்டு அழுது அரற்றும் அப்பத்தாக்களிடம் கேளுங்கள் பிரிவின் வலி எவ்வளவு கொடியதென்று!.
தேர்வுக்கும், காதலித்த பெண்ணுக்கும், தொழிலின் நஷ்டத்திற்கும், ஈகோவுக்கும், ஆத்திரத்துக்கும், வெறுப்புக்கும் மரணத்தின் வழியாக பதில் சொல்ல முடியாது.
நிர்கதியாக நின்ற நிலையிலும் பிள்ளைகளின் வாழ்வை நினைத்துப் போராடி மீண்டெழ நினைக்கிற அப்பாக்களை எண்ணிப் பாருங்கள், உடைந்த உள்ளங்கள் உருக்குக் கோட்டையாய் உயர்ந்து எழும் அதிசயத்தை உணர்வீர்கள்.