தன்னம்பிக்கை தரும் திருமறை வசனங்கள்
இன்று நாம் சந்தித்து வரும் சோதனையான சூழலை எதிர்கொள்ள தன்னம்பிக்கை மிகவும் அவசியமாகிறது. நோயை வழங்குவதும் அதை குணப்படுத்துவதும் அல்லாஹ் எனும் உறுதியான நம்பிக்கை நமக்கு இருத்தல் வேண்டும், அத்துடன் நமக்கு ஏற்படும் நோயினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன எனும் போது பொறுமையுடன் நோயை ஏற்றுக்கொள்வது நம்பிக்கையாளர்களின் பண்பாக இருக்க வேண்டும். நோயை குணப்படுத்த மருத்துவம் செய்வதோடு இறைவனிடம் நிவாரணத்தை வேண்டி பிரார்த்திக்க வேண்டும்.
நோயுறும் போது
“நான் நோயுறும்போது அவனே (அல்லாஹ்) எனக்கு நிவாரணம் தருகிறான்.”
அல் குர்ஆன் 26:80
உமது இறைவன் உம்மைக் கைவிடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை. இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது. உமது இறைவன் பிறகு உமக்கு வழங்குவான். நீர் திருப்தியடைவீர்.
அல் குர்ஆன் 93:3-5
தனியாக இருப்பதாக உணரும் போது
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு சிறையில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளோம். தனி அறையில் நம்முடன் யாரும் இல்லாமல் தனித்து இருப்பது என்பது பெரும் வேதனையை தருகிறது, இது போன்ற தனிமையாக கருதும் சந்தர்பங்களில் அல்லாஹ் நம்முடன் இருக்கிறான் என்ற நம்பிக்கை நம்மை சொர்வு அடைய செய்யாமல் பாதுகாக்கும்,
“நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் (அல்லாஹ்) உங்களுடன் இருக்கிறான்” அல் குர்ஆன் 57:4
*”நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” * அல்குர்ஆன் 9:40
