துல்ஹஜ் மாதத்திற்கு அடுத்து வரும் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷூரா நோன்பு எனப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஆஷூரா நோன்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள் . இந்நாளில் நோன்பு நோற்க்கும்படி இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்தமாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச்சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்புநோற்பதை நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரி 2006
ஆஷூரா நோன்பு நோற்பதின் நோக்கம் என்ன?
ஆஷூரா நோன்பு நோற்பதின் நோக்கம் அறியாமல் பலரும் நோற்று வருகிறார்கள். பலர் இஸ்லாமிய வருட பிறப்பு என்பதற்க்காகவும் சிலரோ கர்பலாவில் ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டத்தால் துக்க நாளாக அனுஷ்டித்து தவறாக புரிந்து நோன்பு நோற்று வருகின்றனர். ஆனால் இந்நோன்பு எதற்காக என்பதைப் பற்றி பின்வரும் ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே,மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3397
கொடிய அரசன் ஃபிர்அவ்னும், அவனுடைய கூட்டத்தினரும் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது. இதுவே இந்நோன்பின் நோக்கமாகும்.
ஆஷூரா நோன்பின் நன்மைகள் ?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1976
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977
யூதர்களுக்கு மாறு செய்வோம்
ஃபிர்அவ்ன் கொல்லப்பட்ட ஆஷுரா நாளை யூதர்களும் கொண்டாடி வந்தனர் அவர்களும் ஆஷுரா நோன்பு நோற்று வந்ததை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று,மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால்,அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.
இன்னொரு ஹதீஸில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால்,ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1916, 1917 அபூதாவூத் 2089
ஆக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிதந்த அடிப்படையில் வருகின்ற முஹர்ரம் 9 மற்றும் 10 நாட்களில் ( தமிழகத்தில் 2019 ம் ஆண்டு செப்டம்பர் 10,11 நாட்களில் செவ்வாய் மற்றும் புதன் கிழமை அன்று ) நோன்பு நோற்று அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவோம்.
அல்லாஹ் நமது அமல்களை ஏற்று கொள்ள பிரார்த்திப்போமாக