ஆயத்துல் குர்ஸி

திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயம் 255ம் கீழ்கண்ட வசனம் ஆயத்துல் குர்ஸி என அழைக்கப்படுகிறது. இவ்வசனத்தில் அல்லாஹ்வுடைய பல்வேறு பண்புகளை நாம் அறியலாம்

ல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமாஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லாபி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்பஹும் வலாயுஹீ(த்)தூன பிஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிஃப்ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன். அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்? அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான். அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர. அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும். அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று. அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.)

ஆயத்துல் குர்ஸி சிறப்பு
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “அபுல் முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” எனக் கேட்டார்கள். நான் “அல்லாஹ்வும், அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினேன். அவர்கள் “அபுல் முன்திர், இறைவேதத்தில் உமக்குத் தெரிந்த வசனங்களிலேயே எந்த வசனம் மிகவும் மகத்தானது என்று தெரியுமா?” என (மீண்டும்) கேட்டார்கள். நான் “அல்லாஹு லாயிலாஹ இல்லாஹுவல் ஹய்யுல் கய்யூம்… எனத் தொடங்கும் (2:255 ஆவது) வசனம்” என்று விடையளித்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மகிழ்ச்சியோடு) எனது நெஞ்சில் (ஓர் அடி) அடித்துவிட்டு “அல்லாஹ்வின் மீதாணையாக! உமது கல்வியாற்றல் உம்மை நெகிழச் செய்யட்டும் (வாழ்த்துகள்), அபுல் முன்திரே!” என்றார்கள்
நூல் : முஸ்லிம் (1476)

ஆயத்துல் குர்ஸி ஒதுவதால் கிடைக்கும் நன்மை

நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்நூல்: புகாரி -3275 (ஹதீஸ் சுருக்கம்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :கடமையான ஒவ்வொரு தொழுகைக்கும் பிறகு யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு மரணத்தைத் தவிர வேறொன்றும் தடையாக இருப்பதில்லை. அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா 9532
ஆயத்துல் குர்ஸியை நாமும் கற்று பிறருக்கும் கற்று கொடுப்போமாக

Tags

Share this post: